சவுதி அரேபியாவில் சிறார்களுக்கான மரண தண்டனை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் சிறார்களுக்கான மரண தண்டனை முடிவுக்கு வந்தது.

Update: 2020-04-28 00:25 GMT
ரியாத், 

சவுதி அரேபியாவை பழமைவாதத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். உலகளவில் சவுதி அரேபியாவின் நற்பெயரை புதுப்பிக்கவும், நாட்டை நவீனமயமாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் பட்டத்து இளவரசர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி பல்வேறு உரிமைகளை வழங்கினார்.

அதன்படி பெண்களுக்கு கார் ஓட்ட, மைதானத்துக்கு சென்று விளையாட்டுப்போட்டிகளை பார்க்க, ஆண்துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய போன்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. பெண்ணியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

என்னதான் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும் 18 வயது பூர்த்தியாகாத சிறார்களுக்கும் கூட மரண தண்டனை விதிக்கும் சவுதி அரேபியாவின் செயல்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறி 16 வயது நிரம்பிய சிறுவனுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சிறார்களுக்கு எதிரான மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கான மரண தண்டனையை முடிவுக்கு கொண்டுவந்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 18 வயதுக்குட்பட்டோர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக அபராதம், சிறை, சமூகசேவை ஆகியவற்றை வழங்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. 

சவுதி அரேபியாவின் சிறுபான்மை சமூகமான ஷிட்டே பிரிவை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது, இது அந்நாட்டை பொறுத்தவரை பயங்கரவாத செயல்களுக்கு ஒப்பானதாகும். 

தற்போது இந்த 6 பேருக்கும் மன்னர் சல்மான் மன்னிப்பு வழங்கி மரண தண்டனையை ரத்து செய்துள்ளார். இவர்கள் 6 பேரும் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர்களை விடுதலை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சிறார்களுக்கான மரண தண்டனையை முடிவுக்கு கொண்டுவருவதில் பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர் பட்டத்து இளவரசர் முகமது பின் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கடந்த வாரம் சவுதி அரேபியாவில் இனி கசையடி (சவுக்கடி) தண்டனை வழங்க கூடாது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்