பிரதமர் மோடியின் ‘டுவிட்டர்’ கணக்கை பின்தொடராதது ஏன்? - அமெரிக்கா விளக்கம்

பிரதமர் மோடியின் ‘டுவிட்டர்’ கணக்கை பின்தொடராதது ஏன்? என்பது குறித்து அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

Update: 2020-04-30 23:15 GMT
வாஷிங்டன், 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரின் ‘டுவிட்டர்’ கணக்குகளை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை பின் தொடராதது பற்றி டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அந்த நாடுகளின் தலைவர்கள் அந்த சுற்றுப்பயணம் குறித்து என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு பதில் அளிப்பதற்காக அவர்களுடைய ‘டுவிட்டர்’ கணக்குகளை ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்தொடர்வது வழக்கம்.

அந்த வகையில், டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோரின் ‘டுவிட்டர்’ கணக்குகளை வெள்ளை மாளிகை பின் தொடர்ந்தது. இந்த வார தொடக்கத்தில் இருந்து, அப்படி பின்தொடர்வதை நிறுத்தி விட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்