அமெரிக்காவில் அதிவேகத்தில் காரை ஓட்டிய 5 வயது சிறுவனால் பரபரப்பு

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் அதிவேகத்தில் காரை ஓட்டி சென்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளான்.

Update: 2020-05-07 02:28 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று அந்த காரை மறித்தனர்.

பின்னர் காரின் கதவை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனிடம் இது யாருடைய கார்? காரை எடுத்துக்கொண்டு எங்கே தனியாக செல்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு சிறுவன் அளித்த பதிலை கேட்டு போலீசாருக்கு தலை சுற்றியது.

இந்த கார் தனது பெற்றோருடையது என்றும், தனக்காக விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினி மாடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சிறுவன் கூறினான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவன் வெறும் 3 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.228 ) மட்டுமே வைத்திருந்தது தெரியவந்தது. (லம்போர்கினி மாடல் காரின் விலை 1 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 கோடியே 36 லட்சத்து 49 ஆயிரம்) என்பது குறிப்பிடத்தக்கது)

இதையடுத்து சிறுவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்