கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்தும் பாகிஸ்தான் அரசு

கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்த உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-07 15:40 GMT
இஸ்லாமாபாத்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது சுமார்  38,53,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2,66,125 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு 24,073 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வைரஸ் தொற்றுக்கு 564 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஐந்து வாரங்களுக்கு பிறகு வரும் சனிக்கிழமை முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து இயங்காது என்றும், பள்ளிகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், “ கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வரும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்பது தெரியும். ஆனால், மக்கள் ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை தளர்த்துவது கொரோனா தொற்று பரவலின் வேகத்தை அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்