நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியை தொடர்ந்த நியூசிலாந்து பிரதமர்

நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் நியூசிலாந்து பிரதமர் தனது பேட்டியை தொடர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2020-05-25 23:15 GMT
வெலிங்டன், 

நியூசிலாந்தில் கொரோனா தொற்றை கவனமாக கையாண்டு கட்டுப்படுத்தியதால் அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் பெண் தலைவர் ஒருவர் ஆளும் நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி ஜெசிந்தா உலகம் முழுவதும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தலைநகர் வெலிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவாறு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி வழங்கி கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் நாடாளுமன்ற வளாகம் லேசாக குலுங்கியது. ஆனாலும் ஜெசிந்தா எந்தவித சலனமும் இன்றி சகஜமாக பேட்டியை தொடர்ந்தார். அவர் தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “நாடாளுமன்ற வளாகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. நாம் இங்கு லேசான நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கிறோம். என் பின்னால் பொருட்கள் நகர்கிறதா?” என்று கேட்டார். அதற்கு தொகுப்பாளர் “ஆம், நிலநடுக்கத்தால் கட்டிடம் குலுங்குகிறது. உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையே. நலமாக இருக்கிறீர்கள்தானே, பேட்டியை தொடர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு ஜெசிந்தா “புன்னகை செய்தபடியே பேட்டியை தொடரலாம்” என கூறினார்.

அதன்படி நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் அவர் நேர்காணலை முழுமையாக முடித்தார். இதனிடையே வெலிங்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாகவும், எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்