ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கங்கள் தாக்கின

ஆஸ்திரேலியாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை சிங்கங்கள் தாக்கிய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2020-05-29 22:15 GMT
கான்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஷோல்ஹெவன் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 35 வயது பெண் ஒருவர் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் அங்கு ஒரு இடத்தை சுத்தம்செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை 2 சிங்கங்கள் ஓடி வந்து தாக்கியதால் அவர் அலறித் துடித்தவாறு ஓட்டம் எடுத்தார். படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிட்னி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவுவோம், மற்ற பணியாளர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்த பெண் பராமரிப்பாளர் பற்றி நியு சவுத்வேல்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பே ஸ்டாக்மேன் கூறும்போது, “அந்தப் பெண் மீது நடந்துள்ள தாக்குதல் கொடூரமானது. இந்த தாக்குதலுக்கு பிறகு சம்மந்தப்பட்ட விலங்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது” என குறிப்பிட்டார். சம்பவம் நடந்த உயிரியல் பூங்கா மார்ச் 25-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும் செய்திகள்