நியூசிலாந்தில், இந்தியாவில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளியால் பரபரப்பு

நியூசிலாந்தில், இந்தியாவில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-08 22:30 GMT
வெல்லிங்டன், 

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அங்கு 23 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு திரும்பிய அந்த நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ஆக்லாந்து நகரில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப் பட்டார்.

இந்த நிலையில் 32 வயதான அந்த நபர் நேற்று தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து தப்பி சென்றார்.

தனிமைப்படுத்தல் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் மாலை நேரத்தில் இருளை பயன்படுத்தி அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் அந்த நபர் அதே பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு திரும்பியுள்ளார்.

அப்போதுதான் அவர் அங்கிருந்து தப்பி சென்ற சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை அல்லது 4000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்