நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு கடந்த 40 நாட்களில் 132 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த 40 நாட்களில் 132 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-07-24 16:32 GMT
காத்மண்டு,

நேபாளத்தில் பருவமழை காலத்தில் பெய்து வரும் கனமழை பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி வருகிறது.  இன்னும் 60 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்றும் நேபாள நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில், நிலச்சரிவுகள், வெள்ளம், பனிச்சரிவு மற்றும் கனமழை என 4,500
சம்பவங்கள் ஏற்பட்டு மொத்தம் 1,952 பேர் உயிரிழந்து உள்ளனர்.  பெருமளவில் பொருட்களும் சேதமடைந்து உள்ளன.  பெரிய அளவிலான 19 பனிச்சரிவுகளில் சிக்கி 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டும் கடந்த மாதம் மழைக்கால பருவம் தொடங்கியது.  இதில் நாட்டிலுள்ள 77 மாவட்டங்களில் 70 மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளன.  இயற்கை பேரிடர் புள்ளிவிவரத்தின்படி, நேற்று வரை 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர்த்து 53 பேரை காணவில்லை.  128 பேர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மழைக்காலம் தொடங்கிய பின்னர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, இந்த ஆண்டு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அதனால் பொருட்சேதங்கள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.  நேபாள அரசு அதுபற்றிய கணக்கெடுப்புகளை இன்னும் நடத்த தொடங்கவில்லை.

கடந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி முதல் 40 நாட்களில் 48 பேர் உயிரிழந்தனர்.  ஆனால், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்