இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது; கொரோனா பலியில் மெக்சிகோ, உலகிலேயே மூன்றாவது இடம்

கொரோனா உயிர்ப்பலியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.

Update: 2020-08-01 19:14 GMT
மெக்சிகோ சிட்டி,

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகள் உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காதான், உயிர்ப்பலியில் முதல் இடத்தில் தொடர்கிறது. நேற்று மதியம் வெளியான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 826 பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 92 ஆயிரத்து 568 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

மூன்றாம் இடத்தில் இருந்த இங்கிலாந்தை (46 ஆயிரத்து 204) பின்னுக்கு தள்ளிவிட்டு, மெக்சிகோ அந்த இடத்துக்கு வந்துள்ளது. மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆக பதிவாகி உள்ளது.

மெக்சிகோவில் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மெக்சிகோ சிட்டியில் கடந்த ஜூன் மாதம் மத்தியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு திரும்பினர். அத்தியாவசியமற்ற சில வணிகங்கள் கடந்த மாத தொடக்கத்தில் அங்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன.

மெக்சிகோவில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிபர் ஓப்ரடார் மெதுவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் அவர் தாமதமாக இருந்துவிட்டு, மீண்டும் திறப்பதில் மிக விரைவாக செயல்பட்டார் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசு கையாண்ட விதத்தை 10 மாகாண கவர்னர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாடியதுடன், தொற்றுநோயியல் நிபுணரான சுகாதார துறை துணை செயலாளர் ஹியூகோ லோபஸ் கட்டெல் பதவி விலகவும் வலியுறுத்தி உள்ளனர்.

மெக்சிகோவில் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 637, பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்து 688 ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தவரையில் வியட்னாம் உயிர்ப்பலியே இன்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்று உலக அரங்கில் பாராட்டைப்பெற்றது.

ஆனால் அந்த நிலை இப்போது மாறி விடடது. அங்கு முதன்முதலாக கடந்த வெள்ளிக்கிழமையன்று 70 வயதான ஒருவரும், அவரைத் தொடர்ந்து 61 வயதான மற்றொருவரும் கொரோனாவுக்கு பலியாகினர். இந்த நிலையில் நேற்று மூன்றாவதாக ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் வியட்னாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. மூவரும் கொரோனா வைரஸ் தொற்று மையமாக அங்கு கருதப்படுகிற டா நாங் நகர ஆஸ்பத்திரியில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 பேரும் அடுத்தடுத்து பலியாகி இருப்பதால் வியட்னாம் திணறுகிறது.

இப்போது அந்த நகரம் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரை விட்டு யாரும் வெளியே செல்லவோ, நகருக்குள் யாரும் வரவோ அனுமதி இல்லை. அங்குள்ள விளையாட்டு அரங்கில் தற்காலிக ஆஸ்பத்திரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு உதவ பிற நகரங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வியட்னாமில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 558, பலியானவர்கள் எண்ணிக்கை 3 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்