சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலி

சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலியாகினர்.

Update: 2020-08-05 21:55 GMT
பீஜிங், 

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹார்பினில் தனியாருக்கு சொந்தமான உணவு பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அருகிலேயே அதன் கிடங்கு உள்ளது. இங்கு உணவு பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த உணவு கிடங்கில் தொழிலாளர்கள் சிலர் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் உணவு கிடங்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் தொழிலாளர்கள் 9 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உணவு நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்