நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிமுகம்: இலங்கையில் மீண்டும் மகிந்தா ராஜபக்சே பிரதமர் ஆகிறார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி முகத்தில் இருப்பதால் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகிறார்.

Update: 2020-08-06 21:30 GMT
கொழும்பு, 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

225 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுதந்திர குழுக்களும் களம் இறங்கின. ஆனாலும் முக்கிய போட்டி, அதிபர் கோத்தபய ராஜபச்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரின் சகோதரர் பசில் ராஜபக்சேவால் தொடங்கப்பட்ட அவர்களின் குடும்ப கட்சியான எஸ்.எல்.பி.பி. (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா), ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்.ஜே.பி.) என்ற பெயரில் தனி அணி உருவாக்கி களம் இறங்கிய சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் நிலவியது.

மேலும் தமிழர் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் மூன்று அணிகளாக களம் கண்டன.

70 சதவீதம் வாக்குப்பதிவு

மொத்தம் 7,200-க்கும் அதிகமான வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பினை, 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பெற்றிருந்தனர்.

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும், குறிப்பிடத்தக்க எந்த வன்முறைச்சம்பவங்களும் இன்றி அமைதியாக நடந்த தேர்தலில் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, நீண்ட வரிசையில் காத்து நின்று, கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் தங்கள் ஓட்டினை பதிவு செய்தனர்.

70 சதவீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகள் பதிவானதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியா அறிவித்தார்.

பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கி நடந்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் குடும்ப கட்சியான எஸ்.எல்.பி.பி., முன்னணி பெறத்தொடங்கியது.

அப்போது டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பசில் ராஜபக்சே, “எங்கள் கட்சி புதிய அரசை அமைக்கும். எங்கள் கட்சியை ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே பிற பழைய கட்சிகளை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்யும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். அதன்படியே அவரது கட்சி வெற்றி முகத்தில் உள்ளது. எனவே அங்கு மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது.

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்