ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள்; தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள் என தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-08 22:46 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

அந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது. அந்த அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் தனது படை வீரர்களை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெறும் தலீபான் பயங்கரவாத அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் சுஹைல் சாஹீன் கூறியதாவது:-

ஆம் அவர்களால் முடியும். தேர்தலுக்கு முன்பு அவர்கள் விலகினால் அது அவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு இருக்க முடியாது என்பதால், ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு மற்றும் நாட்டின் மறுவாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் பங்கேற்பதை நாங்கள் வரவேற்போம். ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் ராணுவ பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தேர்தலுக்கு முன்பு அவர்கள் அதை செய்தால் நாங்கள் வரவேற்போம். பாராட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்