உலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பு, 6 வாரங்களில் இரட்டிப்பு ஆகி உள்ளது.

Update: 2020-08-12 03:53 GMT
டோக்கியோ, 

சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில், முதன்முதலாக கொரோனா வைரஸ் உருவாகி வெளிப்பட்டது. ஏறத்தாழ 8 மாத காலத்தில் உலகின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா கால் பதித்து, மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

அந்த வகையில் 2 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் நேற்று கூறியது. உலக அளவில் மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 18 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

கொரோனா கடந்த ஆண்டு டிசம்பரில் உகானில் தோன்றி வெளிப்பட்ட 6 மாதங்களில் உலகமெங்கும் 1 கோடி பேருக்கு பரவியது. அதன் பின்னர் 6 வாரங்களில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. இவர்களில் 40 சதவீதத்தினர் அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆவர்.

உலகம் முழுவதும் 2 கோடி பேருக்கு மேல் கொரோனா தாக்கியதில், மூன்றில் இரு பங்கினர் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் கடைசி ஒரு வார கால கொரோனா பாதிப்பு சராசரி என்பது 58 ஆயிரத்து 768 ஆக பதிவாகி இருக்கிறது. அமெரிக்காவில் தொற்று பாதிப்பு சராசரி, 53 ஆயிரத்து 813 ஆக இருக்கிறது.

6 வார காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 99 ஆயிரத்து 506-ல் இருந்து, 7 லட்சத்து 36 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. அதாவது புதிதாக 2 லட்சத்து 36 ஆயிரத்து 685 பேர் புதிதாக இறந்துள்ளனர். தினசரி சராசரியாக 5,200 பேர் இறந்துள்ளனர். இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இறந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 465 ஆக உள்ளது.

மற்ற நாடுகளை பொறுத்தமட்டில், இந்தோனேசியா, ஜப்பானில் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது. 50 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இங்கு உடல் பருமன் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகம்.

ஜப்பானில் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோடை விடுமுறையை மக்கள் தங்கள் வீடுகளில் கழிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். டோக்கியோதான் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு 7 சதவீதம்பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. ஆசியாவை பொறுத்தமட்டில் வியட்நாமில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளதாக பதிவாகி இருக்கிறது. டனாங்கில் புதிய பரவல்கள் பதிவாகி உள்ளன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடனான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகி வருகிறது. அதே நேரத்தில் விக்டோரியா மாகாணத்தில் 331 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் செய்திகள்