பாகிஸ்தானில் பரிதாபம்; ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சாவு

பாகிஸ்தானில் ஏரியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-19 00:19 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டா மாவட்டத்தில் கீஞ்சர் ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் புகழ்பெற்றதாகும். இதனால் நாடு முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்லும் படகில் உரிமையாளர்கள் அவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடைகளை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் படகு ஒன்றில் சவாரி செய்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அதற்குள் 8 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக சுமை மற்றும் பலத்த காற்று காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்