சீனாவில் கோர விபத்து: ஓட்டல் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-31 00:29 GMT
பீஜிங்,

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் இந்த ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணி அளவில் திடீரென ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் ஓட்டலில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அலறித்துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புப்படையினர், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்புப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். இதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 27 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்களும், 21 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டல் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றும், இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்