கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து: ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சம்

கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், ஆயிரக்கணக்கான அகதிகள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Update: 2020-09-09 22:41 GMT
ஏதென்ஸ், 

உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

அப்படி கிரீசுக்கு வரும் அகதிகள் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் லெஸ்போஸ் தீவின் தலைநகர் மோரியாவில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். 3,000 பேர் இருக்க வேண்டிய முகாம்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் தங்கி உள்ளனர். இதனிடையே இங்குள்ள ஒரு முகாமில் தங்கியுள்ள சோமாலியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அகதிகள் முகாம்கள் உள்ள இடத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி அகதிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மோரியாவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் முகாம் முழுவதிலும் பரவியது. இதனால் பீதியடைந்த அகதிகள் தங்களின் உடைமைகளுடன் முகாமை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். தீ விபத்தில் முகாம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால் ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அகதிகள் அருகிலுள்ள நகரத்துக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சாலைகளிலேயே படுத்து உறங்கும் அவல நிலை ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் அகதிகள் ஒரு சிலருக்கு லேசான தீக்காயமும், புகை காரணமாக சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்