அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீது மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி பரபரப்பு பாலியல் புகார் கூறி அதிர வைத்து இருக்கிறார்.

Update: 2020-09-18 23:30 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ள ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தருணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு எழுந்ததை போன்று டிரம்ப் மீது இப்போதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.

இந்த முறை பாலியல் புகாரை எழுப்பி இருப்பவர், முன்னாள் மாடல் அழகி ஏமி டோரிஸ் (வயது 47) ஆவார். இதையொட்டி அவர் இங்கிலாந்து நாட்டின் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நியூயார்க் நகரில் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அந்த போட்டியை காண நான் சென்றிருந்தேன். மிக முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் நான் அமர்ந்திருந்தேன். அங்கே டிரம்பும் அமர்ந்திருந்தார். அப்போது எனக்கு வயது 24.

என் அருகில் இருந்த டிரம்ப், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அவரை உடனே தள்ளி விட்டேன். அனால் அதைத் தொடர்ந்து என் மீதான அவரது பிடி இறுகியது. எனது உடல் உறுப்புகள் எல்லாமே அவரது பிடியில் இருந்தன. என்னால் அவரிடம் இருந்து விடுபட முடியவில்லை. நிறுத்துங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இந்த பிரச்சினையை நான் 2016-ம் ஆண்டே பேசிவிட நினைத்தேன். ஆனால் எனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக அப்போது அதை நான் செய்யவில்லை.

இப்போது என் மகள்களுக்கு டீன் ஏஜ் பருவம் (பதின்ம பருவம்) வந்து விட்டது. இப்போது, நீங்கள் விரும்பாத எதையும் யாரும் செய்ய நீங்கள் அனுமதிக்கக்கூடாது என்று என் மகள்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே இப்போது கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை அவர் அந்த நாளேட்டிடம் 15 மாதங்களுக்கு முன் கூறி இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் இது பொதுவெளியில் செல்ல அவர் விரும்பவில்லை என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த பின்னர், இதுபற்றி ஏமி டோரிஸ் தனக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டாரா என்பதை அந்த நாளேடு தெரிந்து கொள்ள விரும்பி அவரது தெரபிஸ்ட் உள்ளிட்டவர்களுடன் பேசியதாகவும் தெரிவித்து இருக்கிறது.

டிரம்புடன் கழித்த தருணங்கள் பற்றிய படங்களையும் ஏமி டோரிஸ் வழங்கியதாகவும் அந்த நாளேடு கூறி உள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது டிரம்ப், மரியா மேப்பிள்சை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த பாலியல் புகார், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இதை டிரம்ப், தனது வக்கீல்கள் மூலம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “இந்த சம்பவம், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது நடந்தது என்றால், அதற்கு பல சாட்சிகள் இருந்திருப்பார்களே?” என்று டிரம்பின் வக்கீல்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் கூறினர்.

இதையொட்டி டிரம்பின் தேர்தல் பிரசார சட்ட ஆலோசகர் ஜென்னா எல்லிஸ் கூறியதாவது:-

ஏமி டோரிஸ் குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்ற இந்த கட்டுக்கதையை வெளியிட்ட அந்த பத்திரிகை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதி டிரம்பை தாக்கும் மற்றுமொரு பரிதாபகரமான முயற்சி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்