வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரினார்- தென்கொரியா தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Update: 2020-09-25 10:03 GMT
சியோல்,

1950-ம் ஆண்டு நடந்த கொரிய போருக்கு பின்னர் தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. இரு நாடுகளிடையே தீராப்பகைமைதான் நிலவி வந்தது.

இந்த நிலையில் தென் கொரியாவில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பனிப்போர் விலகி சுமூகமான உறவு தொடங்கியது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எல்லையில் சந்தித்து பேசி ஒரு ஒப்பந்தம் செய்தனர். மே மாதம் 26-ந் தேதி இவ்விரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புகளை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முன்னெடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் இரு முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் சமீப காலமாக வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையேயான உறவில் நல்லிணக்கம் இல்லை. கடந்த ஜூன் மாதம் வடகொரிய தலைமைக்கு எதிராகவும், கடுமையாக விமர்சித்தும் துண்டுபிரசுரங்கள் நிரப்பப்பட்ட பலூன்களை தென்கொரிய குழு, வடகொரியாவினுள் அனுப்பியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், வட கொரிய எல்லைக்கு 10 கி.மீ. தொலைவில், யியோன்பியோங் தீவுக்கு அருகே 47 வயதான தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரி கடந்த திங்கட்கிழமையன்று படகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் திடீரென மாயமானார். அவர் அந்தப் படகில் தனது ‘ஷூ’க்களை விட்டுச்சென்றிருந்தது தெரிய வந்தது. அவர் வடகொரியாவுக்குள் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர்நேரப்படி பகல் 3.30 மணிக்கு அவர் வடகொரியாவுக்கு சொந்தமான கடல்பகுதியில் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரை வடகொரிய துருப்புகள் விசாரணை நடத்தி சுட்டுக்கொன்று விட்டனர். அத்துடன் அவரது உடலை எண்ணெய் ஊற்றி எரித்தும் விட்டனர். இதை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த வன்செயலால் இரு தரப்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவியது.  வடகொரியாவின் செயலை மிருகத்தனமான செயல் என கூறி தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிப்பதுடன், காரணமானவர்களை வடகொரியா தண்டிக்கவும் வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில்,  தென்கொரிய வீரர் கொல்லப்பட்டதற்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கிம் ஜாங் அன், தென்கொரிய அதிபரிடமும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்