2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பால் மரணமடைந்த மனிதனின் மூளை செல்கள் கண்டுபிடிப்பு

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியஸ் எரிமலை வெடிப்பில் பலியான மனிதனின் மண்டை ஓட்டில் அப்படியே மூளை செல்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2020-10-08 16:31 GMT
பெடரிகோ

ஹெர்குலேனியம்  என்ற பண்டைய ரோமானிய நகரத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவர்கள் மனித மூளையின் நரம்பியல் கட்டமைப்புகள் உறைந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வெசுவியஸ்எரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த போது இந்த நபர் இறந்து உள்ளார்.உயிரிழந்தபோது அந்த நபரின் வயது 20ஆக இருந்திருக்கும் என்றும், ஒரு மர படுக்கையில் இருந்த அவரது உடலின் எச்சங்கள் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"ஹெர்குலேனியத்தில் கண்டறிந்த திசுக்களைப் பற்றிய ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, எதிர்காலத்தில் உயிர்களைக் காப்பாற்ற அந்த ஆராய்ச்சிகள் உதவக்கூடும்" என்று இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் குழுவின் மூத்த ஆய்வாளர் பியர் பவுலோ பெட்ரோன் கூறி உள்ளார். இவர், பெடரிகோவில் உள்ள நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மானுடவியல் ஆய்வாளர் ஆவார்.

அறிவியல் இதழ் ஒன்றில்  வெளியிடப்பட்ட ஆய்வில் பியர் பவுலோ கூறியதாவது:- வெடிப்பின் தீவிர வெப்பமும், அதையடுத்து ஏற்பட்ட உடனடி குளிர்ச்சியும், அந்த நபரின் மூளையை ஒரு கண்ணாடி பொருளாக மாற்றியது, இதனால் அவரது நரம்பியல் கட்டமைப்புகள் அப்படியே உறைந்து போயின”.

"வெப்பநிலை துரிதமாக குறைந்ததற்கான சான்றுகள் மூளை திசுக்களில் காணக்கப்படுகின்றன. எரிமலை வெடிப்பின் போது நிகழும் செயல்முறைகளின் ஒரு தனித்துவமான அம்சம் இதுவாகும். எதிர்காலத்தில் எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானிப்பதற்கு பொருத்தமான தகவல்களை தற்போது நாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் வழங்கக்கூடும்" என்று கூறி உள்ளார்.

மேலும் பியர் பவுலோ கூறும் போது பல்வேறு கோணங்களிலும் ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ளோம். எங்களுக்கு கிடைக்கும்  தரவுகளும் தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவராலும் அறியப்பட்ட வெசுவியஸ்எரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த போது என்ன நடந்தது என்பது போன்ற பிற தகவல்கள் கிடைக்கும். அதன் மூலம் சரித்திரம் மற்றும் அறிவியலின் வேறு கோணங்களையும், புதிய அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்" என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்