கொரோனா காரணமாக இந்தியாவின் பொது கடன் விகிதம் 90 சதவீதமாக உயரும் - சர்வதேச நிதியம் தகவல்

கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பொது செலவினங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் நாட்டின் பொது கடன் விகிதம் 90 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

Update: 2020-10-15 09:54 GMT
வாஷிங்டன், 

கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பொது செலவினங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் நாட்டின் பொது கடன் விகிதம் 90 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

இது தொடர்பாக நிதியத்தின் நிதித்துறை இயக்குனர் விடோர் கஸ்பார் கூறுகையில், ‘இந்தியாவின் பொது கடன் விகிதம் கடந்த 1991-ம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நாட்டின் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 70 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது சுவாரஸ்யமானது. ஆனால் எங்கள் கணிப்புப்படி, கொரோனாவை எதிர்கொள்வதற்காக பொது செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் வரி வருவாய் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வீழ்ச்சி ஆகியவை பொதுக்கடன் விகிதத்தை 17 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 90 சதவீதமாக உயர்த்தும்’ என்று கூறினார்.

இந்த விகிதம் முன்னோக்கி சென்று 2021-ல் உறுதிப்படும் என கூறிய விடோர், பின்னர் 2025-ம் ஆண்டுவாக்கில் மெதுவாக குறையும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் நிதி நிலைமை குறித்து அவர் பேசும்போது, ‘கடந்த 1991-ன் பொருளாதார தாராளமயமாக்கல் முதல் உலக வளர்ச்சியின் முக்கியமான ஆதாரமாக இந்தியா விளங்கி வருகிறது. 1991-2019 ஆண்டுகளில் நாட்டின் சராசரி அசல் ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இந்த அபரிமிதமான வளர்ச்சி லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்க உதவியது’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்