அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் கிடையாது - அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-16 07:05 GMT
வாஷிங்டன்,

கொரோனா தொற்றால் உலக அளவில் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் தற்போது கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 53 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிர்ம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் இருவரும் குணமடைந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் நோய் தடுப்பு பணிகளை நன்றாகவே மேற்கொண்டு வருவதாகவும், மீண்டும் ஒரு பொதுமுடக்கம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பிரச்சார பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்