கொரோனா பாதிப்பு; விஷ பரீட்சையில் இறங்க இங்கிலாந்து முடிவு

உடல்நலமுடன் உள்ள தன்னார்வலர்களின் உடலில் கொரோனா வைரசை செலுத்தி அதன் விளைவுகளை அறிய இங்கிலாந்து ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2020-10-20 12:03 GMT
லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்புகள் அச்சுறுத்தலாக உள்ள சூழலில், அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் முனைப்புடன் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஆய்வாளர்கள் உலகில் முதன்முறையாக புதிய முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.  அந்நாட்டின் இம்பீரியல் காலேஜ் உடன் இணைந்து மனித சவால் திட்டம் என்ற பெயரிலான இந்த ஆய்வு பணியானது, கொரோனா வைரசின் பரவலை குறைத்து, அதன் பாதிப்புகளையும் குறைத்து மற்றும் உயிரிழப்புகளையும் குறைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி முதல் தொடக்க நிலையில், உடல்நலமுடன் உள்ள தன்னார்வலர்களின் உடலில் கொரோனா வைரசை செலுத்தி அதன் விளைவுகள் பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்காக 18 முதல் 30 வயது வரையிலான தன்னார்வலர்களை பணியமர்த்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  அந்த தன்னார்வலர்களுக்கு இருதய நோய்கள், நீரிழிவு அல்லது உடல்பருமன் போன்ற உடல்நல பாதிப்புகள் எதுவும் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர், தன்னார்வலரின் மூக்கு வழியே கொரோனா வைரசானது உட்செலுத்தப்படும்.  இதுபோன்று ஒவ்வொரு தன்னார்வலரையும் மிக கவனமுடன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்திடுவார்கள்.  தொற்றுக்கு முன்பும், தொற்று ஏற்பட்ட உடனும் என்ன நடக்கிறது என அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். 

ஒவ்வொரு நிலையிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி சரியாக ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.  இதன் முடிவுகளை, தடுப்பு மருந்துகள் எப்படி வேலை செய்யும் என்றும் ஆற்றல்மிக்க சிகிச்சைகளை வழங்குவது எப்படி என்றும் ஆய்வாளர்கள் அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

நாங்கள் தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிப்போம் என கூறும் ஆய்வாளர்கள், எந்தவொரு ஆய்வும் முழுவதும் ஆபத்து இல்லாமல் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் எங்களால் முடிந்தவரை ஆபத்துகளை குறைப்பதற்கான பணிகளை உறுதிப்படுத்தி கொள்வதற்கு கடுமையாக உழைப்போம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்