பாகிஸ்தானில் ராணுவம்- சிந்து மாகாண காவல் துறை இடையே பதற்றம்

பாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் 10 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Update: 2020-10-21 20:51 GMT
கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் உயரதிகாரியை ராணுவ வீரர்கள் கடத்தி சென்று அவமதித்துவிட்டதாக கூறி, போலீசார், ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு மத்தியில் கராச்சியில், ராணுவம்   போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். நவாஸ் ஷெரீப் மருமகனை கைது செய்ய சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல்  முஷ்தாக் மெஹரை, ராணுவ வீரர்கள் கடத்தி சென்று, வழக்குப்பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாக   குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, சிந்து மாகாணத்தில் பணிபுரியம் 3 கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள்,  உள்பட போலீஸ் அதிகாரிகள்  விடுப்பு எடுக்கும் போராட்டத்தில்  ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்தனர். இந்த சம்பவம் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டதையடுத்து, விடுப்பு எடுக்கும் போராட்டத்தை போலீசார் கைவிட்டுள்ளனர். 

இதற்கு மத்தியில், கராச்சி நகரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், சிந்து மாகாண போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் 10 போலீசார் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுபற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் தெளிவான எந்த செய்தியும் வெளியிடாமல் மவுனம் காக்கின்றன. 

மேலும் செய்திகள்