சீனாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து; 7 பேர் பலி

சீனாவில் தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.

Update: 2020-11-13 22:26 GMT
பீஜிங்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஜி நகரில் பாலித்தின் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலைக்குள் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. அதனைத்தொடர்ந்து தொழிற்சாலைக்குள் தீ பற்றி எரிந்தது.

இதனால் பீதியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்