அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி எதிர்ப்பாளர்கள் மோதலால் பதற்றம்

அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதியதால் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2020-11-15 20:37 GMT
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய ஜோ பைடன் (77 வயது) அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பைடனின் வெற்றியை ஏற்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும், ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து தனது வெற்றியை திருடிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார். பல மாகாணங்களில் டிரம்ப் தரப்பில் கோர்ட்டுகளில் வழக்கு களும் தொடரப்பட்டுள்ளன.

ஆதரவாளர்கள் பேரணி

ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் சொல்வதை அவரது தீவிர ஆதரவாளர்கள் அப்படியே நம்புகின்றனர். இதனால் அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணிகளை நடத்திக்காட்டினர்.

வாஷிங்டனில் சுதந்திர பிளாசா அருகே காலையிலேயே டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டனர். சாலைகளின் இருபுறமும் வரிசையாக அவர்கள் அணிவகுத்து நின்றனர்.

அமெரிக்க தேசியக்கொடிகளை கைகளில் ஏந்திய அவர்கள் ஓட்டு எண்ணிக்கையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இன்னும் 4 ஆண்டுகள் டிரம்ப்தான் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதை வெளிக்காட்டும் வகையில் ‘யு.எஸ்.ஏ., யு.எஸ்.ஏ. இன்னும் 4 ஆண்டுகள்’ என கோஷமிட்டனர்.

இந்த பேரணியில் ஜார்ஜியாவில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மர்ஜோரி டெய்லர் கிரீன் உள்ளிட்டோர் பேசினர். மக்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி அணிவகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மோதல், முட்டை வீச்சு...

சுப்ரீம் கோர்ட்டுக்கு வெளியே வர்ஜீனியா மாகாணம், வின்செஸ்டரை சேர்ந்த அந்தோணி விட்டேக்கர் என்ற டிரம்ப் ஆதரவாளர், “நான் டிரம்பின் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்” என உற்சாகத்துடன் கூறினார்.

வாஷிங்டனில் பிற்பகலில் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கூடி வந்து, டிரம்ப் ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். டிரம்ப் ஆதரவாளர்கள் மீது முட்டைகள் வீசப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

டிரம்ப் ஆதரவாளர்கள் பிளாக் லிவ்ஸ் மேட்டர் பிளாசா பகுதிக்குள் நுழைய விடாமல் போலீஸ் படையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். அவர்களிடம் இருந்து கொடிகளும், தொப்பிகளும் பறிக்கப்பட்டன.

பல இடங்களில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் காலணிகள் வீசப்பட்டன. ஒருவருக்கொருவர் தாக்கினர். குத்துகளும் விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின.

புளோரிடா, மிச்சிகன், அரிசோனா...

புளோரிடாவில் டெல்ரே கடற்கரையில் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பதாகைகளுடன் பேரணி சென்றனர். அந்த பதாகைகளில் “ஒவ்வொரு வாக்குகளையும் எண்ணுங்கள், மார்க்சிய அரசின்கீழ் வாழ முடியாது” என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

மிச்சிகன் மாகாணத்தில் லான்சிங் நகரில் டிரம்ப் ஆதரவாளர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

அரிசோனா மாகாண தலைநகரான பீனிக்ஸ் நகரில், ஜோ பைடன் குறைவான வாக்குகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து சட்டசபையின் வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் 1500 பேர் கூடி வந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்