பாரிஸ் உணவகத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பிரான்சிடம் ஒப்படைக்க நார்வே அரசு முடிவு

38 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் உணவகத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பிரான்சிடம் ஒப்படைக்க நார்வே அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-11-27 21:26 GMT
ஒஸ்லோ,

கடந்த 1982-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் உள்ள மரைஸ் என்ற பகுதியில் ஜோ கோல்டன்பெர்க் உணவகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததோடு, 20 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் (பி.எல்.ஓ) ஒரு அங்கமான அபு நிடல் என்ற அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் மீது, 2015 ஆம் ஆண்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தாக்குதல் நடந்து நீண்ட காலத்திற்கு பிறகே சந்தேகப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம் அபு நிடல் குழுவின் மற்ற முன்னாள் உறுப்பினர்களின் வாக்குமூலங்கள், பிரெஞ்சு நீதித்துறையின் விசாரணை நடைமுறைப்படி வெகு காலமாக வெளியிடப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவரான வாலித் அப்துல்ரஹ்மான் அபு சயீத் என்ற நபர் நார்வே நாட்டிற்கு 1990களில் குடிபெயர்ந்தார். அவரை ஒப்படைக்க பிரான்ஸ் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நார்வே அரசு நிராகரித்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனது சொந்த குடிமக்களை நார்வே அரசு பிற நாடுகளிடம் ஒப்படைப்பதில்லை.

இந்நிலையில் புதிய பான்-ஐரோப்பிய விதிமுறைகளை நார்வே சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து வாலித் அப்துல்ரஹ்மான் அபு சயீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு 2-வது முறையாக கோரிக்கை விடுத்தது.  இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நார்வே அரசால் கைது செய்யப்பட்ட வாலித் அப்துல்ரஹ்மான் அபு சயீத் விரைவில் பிரான்ஸ் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

மேலும் செய்திகள்