பாகிஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி

பாகிஸ்தானில் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 13 பேர் உடல் கருகி பலியாகினர்.

Update: 2020-11-30 23:02 GMT
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நராங் மந்தி என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எதிரில் வரும் வாகனம் தெரியாத அளவுக்கு சாலையில் பனி மூட்டமாக இருந்தது. 

இதன் காரணமாக இந்த வேன் சாலையில் எதிர்திசையில் வந்த ஒரு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வேன் மற்றும் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி இருந்தன. மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் மோசமான சாலைகள், மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் போன்றவைகள் ஆபத்தான போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்