ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2020-12-09 23:35 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் ஜனாதிபதி டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனால் ஜோ பைடன் வெற்றி பெற்ற பல மாகாணங்களில் அவரது வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வகையில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசார குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மாகாண கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்த பென்சில்வேனியா ஆளுநர் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதையடுத்து பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி டிரம்ப் தரப்பில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 9 நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று அவரின் ஆதரவாளர்கள் நம்பினர்.

இந்த நிலையில் டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எந்தவித விளக்கமும் இன்றி “தடை உத்தரவு கோரி பிறப்பிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என ஒற்றை வரியில் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தேர்தல் முடிவு தொடர்பான பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்படும் என நம்பியிருந்த டிரம்புக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்