அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-21 20:30 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாததோடு தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கக் கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதற்கிடையில் அமெரிக்க தேர்தல் சபை ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தது. ஆனாலும் டிரம்ப் தரப்பு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பதற்கான தங்களது சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் முடிவை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், பென்சில்வேனியா மாகாணத்தின் தேர்தல் சபை உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.

மேலும் செய்திகள்