டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்குங்கள்; எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் பெலோசி

டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்கவில்லையெனில் நீதி விசாரணையை சந்திக்க நேரிடும் என அமைச்சரவைக்கு சபாநாயகர் பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-01-08 07:59 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர்.  தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர்.  கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.  இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

இதனால் டிரம்புக்கு எதிரான நெருக்கடி முற்றியது.  நம்முடைய ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றுக்கு அவமதிப்பு செய்து வந்த அதிபரை நாம் கடந்த 4 ஆண்டுகளாக கொண்டிருந்துள்ளோம் என டிரம்ப் மீது பைடன் சாடி பேசினார்.

இந்நிலையில், அவையின் சபாநாயகரான கலிபோர்னியாவை சேர்ந்த நான்சி பெலோசி மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த செனட்டர் சக் ஷூமெர் ஆகியோர், அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25வது திருத்தத்தினை அமல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்சிடம் கூறினர்.

ஒருவேளை இந்த நடவடிக்கையை எடுக்க பென்ஸ் மறுத்து விட்டால், ஜனநாயக கட்சியினர் 2வது முறையாக டிரம்ப் மீது கிரிமனல் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளனர் என அமைச்சரவைக்கு பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், டிரம்ப் நீதி விசாரணைக்கு ஆளாகும் சூழல் கூட ஏற்படும்.  சபாநாயகர் பெலோசி கூறும்பொழுது, டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து செல்வதற்கு 13 நாட்களே மீதம் உள்ளன.  ஆனாலும், அமெரிக்காவுக்கு எந்த நாளும் பயங்கர நாளாக உருமாற கூடும் என கூறினார்.  கடந்த புதன்கிழமை நடந்த வன்முறை செயல்களை குறிப்பிட்டு, டிரம்பின் நடவடிக்கைகள் தேசதுரோக செயல் என பெலோசி கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சியினரின் நெருக்கடியால் டிரம்ப் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்