இத்தாலியில் ஆஸ்பத்திரியில் விஷவாயு கசிந்து 5 நோயாளிகள் உயிரிழப்பு

இத்தாலியில் ஆஸ்பத்திரியில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-01-16 19:24 GMT
ரோம்,

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள லானுவியோ என்ற நகரில் சிறிய ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென கார்பன் மோனாக்சைடு (விஷவாயு) கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் சுயநினைவை இழந்தனர்.

இதற்கிடையில் காலையில் வேலைக்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிர்காக்கும் கருவிகள் உடன் சென்று ஆஸ்பத்திரிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 
ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 5 நோயாளிகளும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேரும் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அவர்கள் அருகிலுள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்