இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: கோத்தபய ரஜபக்சே

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி நமக்கு கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

Update: 2021-01-24 00:43 GMT
கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை, இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை திட்டத்தின் கீழ் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மோர்ஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகிக்கிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி நமக்கு கிடைக்கும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோத்தபய ராஜபக்சே, “ கொரோனா தடுப்பூசிக்காக நாம் அதிக காலம் காத்திருக்க தேவையில்லை. வரும் 27 ஆம் தேதி இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக நமக்கு கிடைக்கும். சுகாதார துறை முன்கள பணியாளர்கள், ராணுவம் மற்றும் காவல்துறை, கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்.  ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசி பெறப்படும்” என்றார். 

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்