உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு: அமெரிக்கா இரங்கல்

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Update: 2021-02-07 17:59 GMT
வாஷிங்டன்,

உத்தரகண்டின் சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே ரிஷி கங்கா ஆற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனிப் பாறை உடைந்து விழுந்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 125 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ரிஷிகங்கா மின் திட்டமும் வீடுகளும் முற்றிலும் சேதமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிக்கித் தவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். வெள்ளப் பெருக்கில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது .

இதற்கிடையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.  மேலும்,  வெள்ளப்பெருக்கில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்