அமெரிக்காவில் கோர சம்பவம் 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து

அமெரிக்காவில் கோர சம்பவம் 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து 6 பேர் உடல் நசுங்கி பலி.

Update: 2021-02-13 00:18 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவை நோக்கி வீசும் ஆர்க்டிக் கடல் காற்று காரணமாக, அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. ஏற்கனவே அமெரிக்க மக்களை கொரோனா வைரஸ் பாடாய்படுத்தி வரும் நிலையில் இந்த பனிப்பொழிவாலும் மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. பனிப்பொழிவு காரணமாக பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட்வொர்த்தில் உள்ள நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு காரணமாக பயங்கர சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது. முதலில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது கன்டெய்னர் லாரி மோதி நின்றது. அதன் பின்னர் அதிவேகத்தில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது மற்றொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார், வேன், முதல் பெரிய கன்டெய்னர் லாரிகள் வரை ஒன்றன் மீது மற்றொன்று மோதி சாலைகளில் உருண்டன.

இப்படி மொத்தமாக 130-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சங்கிலி தொடர் விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப் பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்