நைஜீரியாவில் அரசு பள்ளி மீது தாக்குதல்; மாணவர் பலி, 42 பேர் கடத்தல்: ஐ.நா. கண்டனம்

நைஜீரியாவில் அரசு பள்ளி கூடமொன்றை தாக்கி மாணவரை கொன்று 42 பேரை கடத்திய சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-02-18 02:02 GMT
நியூயார்க்,

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் ககாரா என்ற பகுதியில் அரசு பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளி கூடத்திற்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.  அதனுடன் நின்று விடாமல் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் இருந்த 27 மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் 3 பேர் மற்றும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் என மொத்தம் 42 பேரை ஆயுதங்களை கொண்டு மிரட்டி, கடத்தி சென்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவரது சார்பில் ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜாரிக் வெளியிட்டுள்ள செய்தியில், பள்ளி கூடங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வெறுப்பிற்குரியது மற்றும் ஏற்று கொள்ள முடியாதது.  கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் எந்த முயற்சியையும் நைஜீரிய அதிகாரிகள் விட்டு விட கூடாது என்றும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டிரெஸ் வலியுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலில் பலியான மாணவரின் குடும்பத்தினருக்கு கட்டிரெஸ் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது வருத்தங்களையும் தெரிவித்து கொண்டார்.

மேலும் செய்திகள்