இளவரசி லத்தீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா - ஐநா மனித உரிமை அலுவலகம்

துபாய் மன்னரின் மகள் இளவரசி லத்தீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஐநா மனித உரிமை அலுவலகம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஆதாரம் கேட்டுள்ளது.

Update: 2021-02-19 17:31 GMT
லண்டன்

ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில், இளவரசி லத்தீபா, 2018 ல் தப்பி ஓட முயன்றதிலிருந்து தனது தந்தை தன்னை பணயக்கைதியை துபாயில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.வீடியோக்களில், இளவரசி லத்தீபா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளார்.

துபாய் மன்னரின் மகள் இளவரசி லத்தீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஐநா மனித உரிமை அலுவலகம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஆதாரம் கேட்டுள்ளது.

இதுகுறித்து  ஐ.நா மனித உரிமைகள் அலுவலக  செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல் கூறியதாவது;-

இந்த வாரம் வெளிவந்த குழப்பமான வீடியோ ஆதாரங்களின் வெளிச்சத்தில் நிலைமை குறித்த எங்கள் கவலைகளை நாங்கள் எழுப்பி உள்ளோம்.
நாங்கள் இளவரசி லத்தீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டுள்ளோம் என கூறினார்.

ஆனால் துபாய் அரசாங்கமும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி  லத்தீபா அல்-மக்தூம்  (35). அவர்  தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒரு நாள், லத்தீபா அல்-மக்தூம் வின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென்  என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்புகிறார்.

எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என லத்தீபா நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரம், எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்கிறது.

படகுகளில் வந்த அமீரக போலீசார் லத்தீபா   இருந்த படகை சூழ்ந்துகொள்கிறார்கள். கதறக் கதற முரட்டுத்தனமாக கையாளப்படும் இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருக்கிறார் அவர். அங்கிருக்கும் ஒரு காவலாளி லத்தீபாவிடம், நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்கிறார்!

இதற்கிடையில் லத்தீபாவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்படுகிறார்.

விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி லத்தீபாவின் கதையை வெளி உலகுக்கு சொல்கிறார். ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. என்ன நடக்கிறது, லத்தீபா உயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, லத்தீபாவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான மேரி ராபின்சன்  வருகிறார்.

ஆனால், மேரி ராபின்சனிடம்  லத்தீபாவுக்கு  மன நல பிரச்சினை என்றும்,லதிபாவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைக்கிறார்கள்.

லத்தீபா மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை மேரி ராபின்சன்  வெளியிடுகிறார்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு லத்தீபாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது டினாவுக்கு... தான் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல் தனக்கு என்னென்ன நடந்தது என பல விஷயங்களை ஒரு குளியலறையில் மறைந்திருந்துகொண்டு தெரிவிக்கிறார்  லத்தீபா .பின்னர்  மீண்டும் லத்தீபா விடமிருந்து வரும் அழைப்புகள் நின்றுபோகிறது, ஒருவேளை அவர் மொபைல் பயன்படுத்தும்போது பிடிபட்டு, அவரது மொபைல் பறிக்கப்பட்டிருக்கலாம்! தற்போது, அவர் வெளியிட்ட வீடியோக்களை ஒவ்வொன்றாக உலகின் பார்வைக்கு வைக்கிறார் டினா.

மேலும் செய்திகள்