கடந்த ஆண்டில் அபுதாபியில், 728 ஆபத்தான பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம் மாநகராட்சி தகவல்

அபுதாபி நகரில் கடந்த ஆண்டு 728 ஆபத்தான பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன என்று அபுதாபி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2021-02-23 10:09 GMT

அபுதாபி,

அபுதாபி நகரில் கடந்த ஆண்டு 728 ஆபத்தான பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன என்று அபுதாபி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அபுதாபி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

30 நாட்களுக்குள்...

அபுதாபி நகரின் அழகுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒவ்வொரு பகுதியும் மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது நகருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பழைய பாழடைந்த கட்டிடம் மற்றும் ஆபத்தான நிலையில் கேட்பாரற்று உள்ள கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்களில் இதுபோன்ற கட்டிடங்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறலாம்.

எனவே இவ்வாறு கேட்பாற்ற வகையிலும், பயன்படுத்தாத நிலையிலும் கட்டிடங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டால், இதுகுறித்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அந்த நோட்டீசில், 30 நாட்களுக்குள், கட்டிட உரிமையாளர்கள் அந்த கட்டிடத்தை இடிக்கவோ அல்லது அதில் பராமரிப்பு பணியை செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கும்.

தகவல் தெரிவிக்கலாம்

மேலும் கட்டிட உரிமையாளர்கள் குறித்த விபரம் தெரியவில்லையெனில் இது குறித்து சமூக வலைத்தளங்களிலும், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றிலும் விளம்பரம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்டு அல்லது விளம்பரம் செய்யப்பட்டு 30 நாட்களை கடந்த பின்னரும் கட்டிடங்களில் மாற்றம் செய்யவில்லையெனில், அந்த கட்டிடமானது உரிமையாளரின் செலவிலேயே மாநகராட்சியின் மூலம் இடிக்கப்படுகிறது.

இவ்வாறாக கடந்த ஆண்டு மட்டும் 728 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதில், மினா ஜாயித் பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளும் அடங்கும்.

இதுபோல் கேட்பாரற்ற வகையில் தங்களது பகுதிகளில் ஏதாவது கட்டிடம் இருந்தால் அது குறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்