அமெரிக்காவின் பட்ஜெட் இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு

அமெரிக்க வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது.

Update: 2021-02-24 21:31 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்கும் முன்பே, அமைச்சர்கள், அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்தார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிகளவில் பதவிகள் வழங்கப்பட்டன. 

அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார்.

ஆனால், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ மான்சின் என்ற செனட் எம்பி. தாண்டன் நியமனத்தை எதிர்த்து  வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இவரைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேனும் அவருக்கு எதிர்த்து வாக்களிப்பதாக தெரிவித்திருந்தனர். 

முன்னதாக செனட் எம்பி.க்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் வாயிலாக நீரா தாண்டன் விமர்சித்து இருந்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நீரா தாண்டன் தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய டுவிட்டர் பதிவுகளை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நீரா தாண்டனின் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோ பைடனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். தனது தவறுக்காக தாண்டன் மன்னிப்பு கேட்டுள்ள போதிலும், அதை ஏற்க எம்பி.க்கள் தயாராக இல்லை. 

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டன் நியமனத்திற்கு வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் ஜென் ப்சாகி கூறுகையில், “பட்ஜெட் துறையை வழிநடத்துவதற்கான சரியான, பொருத்தமான ஒரே நபர், நீரா தாண்டன் மட்டுமே. அவரை விட்டால் வேறு ஆளில்லை. அவர் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்