12 இந்தியர்கள் பலியான பஸ் விபத்து வழக்கு: டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ஒரு ஆண்டாக குறைப்பு துபாய் கோர்ட்டு உத்தரவு

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள்.

Update: 2021-02-26 09:59 GMT

துபாய்,

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து துபாய் நகருக்கு வந்த பயணிகள் பஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி சாலையின் தகவல் பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலையில் ஏற்பட்டது. மொத்தம் 17 பயணிகள் இந்த விபத்தில் பலியானார்கள். இதில், இந்தியாவை சேர்ந்த 12 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர், அயர்லாந்து, ஓமன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்த சாலையில் அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் செல்லவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பஸ்சை டிரைவர் 94 கி.மீ. வேகத்தில் இயக்கியதாலேயே விபத்து நேரிட்டது தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக பஸ்சை ஓட்டிய 55 வயதுடைய ஓமன் நாட்டைச் சேர்ந்த டிரைவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

பஸ் டிரைவர் இந்த தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த கோர்ட்டு டிரைவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைத்து உத்தரவிட்டது. மேலும் அவரை நாடு கடத்தும் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்