7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

கொரோனாவுக்கு எதிராக போராட உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-03-01 23:43 GMT
ஜெனீவா, 

உலக நாடுகளை ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கியதால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால், அடுத்த அலை பரவியதால் பல நாடுகளில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்தாலும்  கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்கக் கூடாது எனவும் மருத்துவ நிபுணர்கள் தரப்பிலும் உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், 7 வாரங்களுக்குப் பிறகு முதல் முறையாக உலக அளவில் கொரோனா பாதிப்பு உயர்வை சந்தித்துள்ளது.  இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மரியா வன் கெர்கோவ் கூறுகையில், “  நம் அனைவருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நாம் அதை(கொரோனா) அனுமதித்தால் இந்த வைரஸ் மீண்டும் உருவாகும். எனவே நாம் அதை அனுமதிக்கக் கூடாது” என்றார். 

அதேபோல், கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வது குறித்து கருத்து கூறிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ், “ கொரோனா தொற்று உயர்வது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் வியப்பளிக்கவில்லை.  கொரோனாவுக்கு எதிராக  போராட உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது” என்றார். 

மேலும் செய்திகள்