உணவுப் பொட்டலங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அமீரக தேசியக்கொடி வடிவமைப்பு; துபாய் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு கின்னஸ் சான்றிதழ்

உணவுப் பொட்டலங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அமீரக தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய தேசிய கொடியை வடிவமைக்க ஏற்பாடு செய்ததற்காக துபாய் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2021-03-04 04:21 GMT
உணவுப் பொட்டலங்கள்
துபாய் நகரில் தொடர்ந்து பல்வேறு கின்னஸ் சாதனைகள் பல துறைகளில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறையின் சார்பில் புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.இந்த சாதனையானது 49 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வைத்து அமீரக தேசியக் கொடி வடிவில் மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டது. இந்த உணவுப் பொட்டலம் ஒவ்வொன்றிலும் அரிசி, கோதுமை, சமையல் எண்ணைய், சீனி, உப்பு, தண்ணீர் மற்றும் கையை சுத்தப்படுத்த உதவும் சானிடைசர் ஆகியவை இருந்தது.

கின்னஸ் சாதனை
இதனை பயன்படுத்தி அமீரக தேசிய கொடி வடிவமானது சிட்டி வாக் பகுதியின் பின்புறம் அமைக்கப்பட்டது. இந்த கொடியின் வடிவம் 498.33 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.இந்த புதிய சாதனையின் மூலம் துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றது. இதற்காக கின்னஸ் சாதனை சான்றிதழை நிறுவனத்தின் அதிகாரி துபாய் இஸ்லாமிய விவகாரத்துறையின் பொது இயக்குனர் டாக்டர் ஹமத் அல் சேக் அகமது அல் சைபானியிடம் வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நேர்மறையான சிந்தனை
இஸ்லாமிய விவகாரத்துறையின் மூலம் கொரோனா பாதிப்பு நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை பயன்படுத்தி கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நேர்மறையான சிந்தனை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சாதனை நிகழ்ச்சியானது உணவுப் பொருட்களை வாங்க உதவும் செயலியை ஏற்படுத்தியுள்ள தனியார் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த செயலியின் வழியாக வசதியற்றவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம் இலவசமாக வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்