தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து விபத்து; 10 தொழிலாளர்கள் படுகாயம்

துபாயில் தனியார் நிறுவன பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-04 22:28 GMT

துபாய்,

துபாயில் உள்ள தனியார் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ் வழக்கம் போல் நேற்று காலை தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது. உம் சுகிம் சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் அந்த பஸ் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும், அவசர மீட்பு குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பஸ் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துபாய் போலீசின் போக்குவரத்து துறை இயக்குனர் சைப் அல் மஸ்ரூயி கூறுகையில், ‘‘இந்த விபத்தானது டிரைவர் போதிய ஓய்வின்றி தொடர்ந்து வேலை செய்ததால் ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனவே நிறுவனங்களில் போக்குவரத்து வாகனங்களை மேற்பார்வை செய்து வரும் அலுவலர்கள், வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் சரியான வகையில் ஓய்வு எடுத்துள்ளனரா என கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்