கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: வங்காளதேசத்தில் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வங்காளதேசத்தில் ஒரு வார காலத்துக்குஅந்த நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

Update: 2021-04-04 01:52 GMT
டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 6,830 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 24 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு மொத்த கொரோனா உயிரிழப்பு 9 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த நாட்டு அரசு நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்த முழு ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த 7 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கோர்ட்டுகள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் பெரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பல வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்