தடுப்பூசி போடும் பணியின் வெற்றி கொண்டாட்டம்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுடன் அமீரகத்தை வலம் வந்த விமானம்

தடுப்பூசி போடும் பணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், அமீரகம் முழுவதையும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுடன் எமிரேட்ஸ் விமானம் வலம் வந்தது.

Update: 2021-04-11 06:01 GMT

90 சதவீதம்

துபாய், அபுதாபி உள்பட அமீரகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. அமீரகம் முழுவதும் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்தநிலையில், தடுப்பூசி போடும் திட்டம் அமீரகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் எமிரேட்ஸ் விமானம் சிறப்பு பயண திட்டத்தை நேற்று மேற்கொண்டது.

இந்த பயணத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள், விமானிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 400 பயணிகள் இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்ய ஆயிரம் திர்ஹாமும், பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய 2 ஆயிரம் திர்ஹாமும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்த கட்டணமானது தன்னார்வ பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த நிதி வழங்கப்படும்.

மலர் கொத்து கொடுத்து வரவேற்பு

இந்த விமான பயணத்தில் பங்கேற்க பயணிகள் தங்களது பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் அடையாள அட்டை, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விமானத்தில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்திருந்தனர்.

இந்த விமான பயணத்துக்கு சிறப்பான உள்கட்டமைப்பு வசதி கொண்ட ஏ380 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. சரியாக மதியம் 12 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் எண் 3-ல் இருந்து புறப்பட்ட இந்த விமானம் பின்னர் மதியம் 2.30 மணிக்கு திரும்பியது. அமீரகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி மீண்டும் துபாய் விமான நிலையம் வந்தடைந்தது. விமான பயணத்தின் போது சுவைமிக்க உணவு வகைகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

விமானம் திரும்ப வந்ததும் பயணிகளுக்கு மலர் கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்கப்பட்டது.

மேலும் செய்திகள்