உலக டால்பின் தினம்: துபாயில், டால்பின்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

உலக டால்பின் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அபுதாபி ஜாயித் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் துபாய் கடல் பகுதியில் படகில் சென்று டால்பின்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.

Update: 2021-04-15 11:45 GMT

துபாய்,

உலக டால்பின் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அபுதாபி ஜாயித் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் துபாய் கடல் பகுதியில் படகில் சென்று டால்பின்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.

டால்பின்

டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது திமிங்கலத்திற்கு நெருங்கிய வகையை சார்ந்தது. உலகில் 17 பேரினங்கள் மற்றும் 40 சிற்றினங்களாக இந்த டால்பின்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

டால்பின்களின் உடல் திமிங்கலம் போல் இழை வடிவமுடையது. சாதாரணமாக 4 அடியில் இருந்து 31 அடி வரை நீளம் வளரக்கூடியது. இவைகள் குறைந்தபட்சமாக 40 கிலோ முதல் 10 டன் வரை எடை கொண்டதாக இருக்கும்.

மனிதர்களுடன் நெருக்கமாக பழகும்

டால்பின்கள் ஊன் உண்ணிகளாகும். இவைகள் மீன்களை உணவாக உட்கொள்கின்றன. டால்பின்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பாக ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றை காணலாம். டால்பின்கள் மிகுந்த புத்திக்கூர்மை உடையவை. மனிதர்களுடன் நெருக்கமாக பழகும் திறன் பெற்றவை.

டால்பின்கள் வேகமாக நீச்சல் அடிப்பதற்கு ஏற்றவாறு அதன் உடல் நீள் வடிவத்தில் உள்ளது. டால்பின்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும். இவை தங்கள் தலைக்கு மேல் உள்ள ஒரு உறிஞ்சும் துளை மூலம் மூச்சு விடுகின்றன. துபாயில் உள்ள ஆழம் குறைந்த ராஷித் துறைமுகம் மற்றும் ஜெபல் அலி வன உயிரின காப்பக கடல் பகுதி ஆகிய இடங்களில் இந்த டால்பின்கள் அதிகமாக காணப்படுகின்றன.

கணக்கெடுக்கும் பணி

இந்த நிலையில் நேற்று அபுதாபி ஜாயித் பல்கலைக்கழகத்தின் இயற்கை மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் அடா நட்டோலி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் துபாய் கடல் பகுதியில் டால்பின்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். நேற்று உலக டால்பின் தினத்தையொட்டி, இந்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டதாக அந்த குழுவினர் தெரிவித்தனர். இது குறித்து அந்த குழுவின் தலைவர் டாக்டர் அடா நட்டோலி கூறியதாவது:-

டால்பின்கள் கணக்கெடுப்பை நடத்த துபாய் மாநகராட்சி அனுமதி வழங்கி படகு மற்றும் ஊழியர்களையும் அளித்துள்ளது. துபாயை பொறுத்தவரையில் இன்டோ பசுபிக் பாட்டில்நோஸ் டால்பின், இந்திய பெருங்கடலில் வாழும் ஹம்பக் டால்பின் மற்றும் பின்லெஸ் போர்போய்ஸ் ஆகிய 3 வகை டால்பின்கள் அதிகமாக காணப்படுகின்றன. துபாய் கடலில் அதிகபட்சமாக 9 அடி நீளம் வரையிலான அளவில் டால்பின்கள் காணப்படுகின்றன.

இதற்கு முன் 2013-14-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் பாட்டில்நோஸ் மற்றும் ஹம்பக் வகையிலான டால்பின்கள் 115 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன் பிறகு தற்போது இவற்றின் எண்ணிக்கை கூடியிருக்கும் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்