இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2.50 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.

Update: 2021-04-20 01:28 GMT
Photo credit: AFP
வாஷிங்டன்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் இந்திய பயணங்களுக்கு கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

 இது குறித்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “ இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் பயணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் கூட புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மற்றும் பரப்பும் அபாயம் உள்ளது. 

எனவே, இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், பயணத்திற்கு முன்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்