அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருபவர் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சுமித் அலுவாலியா.

Update: 2021-05-04 17:38 GMT

சம்பவத்தன்று சுமித் அலுவாலியா ஓட்டலில் பணியில் இருந்தபோது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஓட்டலுக்குள் வந்து வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து சுமித் அலுவாலியா, அந்த நபரை அணுகி ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?’ கேட்டார். அப்போதும் அந்த நபர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சுமித் அலுவாலியா ஓட்டல் காவலாளிகளை அழைத்தார்.

அப்போது அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து சுமித் அலுவாலியாவை தாக்கினார்.‌ இதில் நிலைகுலைந்து போன சுமித் அலுவாலியா, அந்த நபரைப் பார்த்து ‘‘என்ன நடக்கிறது, நான் உங்கள் சகோதரன். என்னை ஏன் தாக்குகிறீர்கள்’’ என பரிதாபமாக கேட்டார்.‌ அதற்கு அந்த நபர் ‘‘எனக்கு உன்னை பிடிக்கவில்லை. உனது நிறம் ஒரே மாதிரி இல்லை’’ எனக்கூறி சுமித் அலுவாலியாவின் தலையில் சுத்தியலால் பல முறை அடித்தார். இதில் சுமித் அலுவாலியாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய கறுப்பினத்தைச் சேர்ந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து சுமித் அலுவாலியா, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே சுமித் அலுவாலியா மீது நடத்தப்பட்ட இந்த இனவெறி தாக்குதலுக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

மேலும் செய்திகள்