கொரோனாவில் இருந்து மீள இந்தியாவுக்கு உதவ கமலா ஹாரிஸ் சபதம்

கொரோனாவில் இருந்து இந்தியா மீள்வதற்கு அமெரிக்கா உதவ கமலா ஹாரிஸ் சபதம் பூண்டுள்ளார்.

Update: 2021-05-08 23:46 GMT
என் குடும்பம் இந்தியாவில்...
கொரோனா வைரசின் இரண்டாவது அலை, இந்தியாவை பாடாய்ப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு இந்த இக்கட்டான தருணத்தில் உதவிக்கரம் நீட்டுவதில் போட்டி போடுகின்றன..இதையொட்டி, வாஷிங்டனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-
பல்லாண்டு காலமாக இந்தியாஸ்போரா, அமெரிக்க இந்திய பவுண்டேசன் அமைப்புகள் போன்ற இடம் பெயர்ந்த குழுக்கள், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை கட்டமைத்துள்ளன. கடந்த ஓராண்டு காலமாக கொரோனா மீட்பு முயற்சிகளில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளீர்கள். அதற்காக நன்றி செலுத்துகிறேன்.உங்களில் பலரும் அறிந்திருப்பதுபோல, எனது குடும்பத்தின் தலைமுறைகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். என் அம்மா அங்கே பிறந்து வளர்ந்தவர்தான். எனது குடும்ப உறுப்பினர்கள் அங்கே உள்ளனர். இந்தியாவின் நலன், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்.

உதவ சபதம்
இந்தியாவில் கொரோனா தொற்றும், உயிர்ப்பலியும் எழுச்சி பெற்று வருவதைக் காண்கிறபோது இதயமே நொறுங்கிப்போகிறது. இந்த தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவுவதற்கு ஜோ பைடன் நிர்வாகம் கூடுதல் அக்கறை செலுத்துகிறது.தொற்றின் தொடக்கத்தில் நாம் பாதிக்கப்பட்டபோது, இந்தியா உதவியது. இந்தியாவுக்கு இப்போது தேவையான நேரத்தில் உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.இந்தியாவின் நண்பர்களாக, ஆசிய குவாட் அமைப்பின் உறுப்பினர்களாக, உலக சமூகத்தின் அங்கமாக இதை நாங்கள் செய்கிறோம். நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டால், இதில் இருந்து இந்தியா கடந்து வந்து விட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண் எம்.பி.குரல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரமிளா ஜெயபால், எம்.பி.யாக உள்ளார். சமீபத்தில் தனது உறவினர்களை சந்திக்க இந்தியா வந்து சென்ற இவர் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு குரல் கொடுத்துள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியாவுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்த சவாலுக்கு எழுந்து நிற்பது தார்மீக பொறுப்பு ஆகும். இந்தியாவுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். இதற்காக திரட்டப்படுகிற நிதி, கொரோனா பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்காக வாஷ் அறக்கட்டளைக்கும், தங்கள் அன்பானவரை இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதி வழங்கி ஆதரிக்கும் கிவ்இந்தியாவுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கூஞ்ச், ஜன் சஹாஸ் அமைப்புகளுடன் இணைந்து உதவும் எடல்கிவ் அமைப்புக்கும் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்