இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்களை அனுப்ப நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு

இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அனுப்ப நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2021-05-14 19:04 GMT
நியூயார்க்,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை  வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக  உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடுவதற்காக இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள், 3 லட்சம் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் (ஆக்சிஜன் அளவிடும் கருவி), 300 வெண்டிலேட்டர்கள் உள்பட பல்வேறு நியூயார்க் நகர நிர்வாகம் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளசியோவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்