ஆப்கானிஸ்தானில் சண்டைநிறுத்தத்தை மீறி தொடர் குண்டுவெடிப்பு 9 பேர் உடல் சிதறி சாவு

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்தை மீறி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Update: 2021-05-15 00:59 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருதரப்புக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பல மாதங்கள் இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த அமைதி பேச்சுவார்த்தை முடிந்தது.

இதற்கிடையில் தலீபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படையை முழுமையாக திரும்பப் பெறும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையையொட்டி தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் 3 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை கடைப்பிடித்து வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அங்கு அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காந்தஹார் மற்றும் குண்டுஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தஹார் மாகாணத்தின் பஞ்ச்வாய் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் கார் ஒன்று சிக்கி வெடித்து சிதறியது. இதில், பெண்கள் சிறுவர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.‌

அதேபோல் குண்டூஸ் மாகாணத்தின் சர்தாவ்ரா மாவட்டத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் தலீபான் பயங்கரவாதிகளே சண்டை நிறுத்தத்தை மீறி இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என ஆப்கானிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் இதுகுறித்து தலீபான்கள் தரப்பில் உடனடியாக என்ற கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்